பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் கட்டியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதன் பில்லையும், கூடவே திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் ஊழல் பட்டியலையும் ஏப்ரலில் வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை 10.15க்கு ரசீது மற்றும் ஊழல் விபரம் வெளியிடப்படும் என்று டிரெய்லர் சகிதமாக நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி எல்லோரும் எப்பொழுது காலை 10.15 மணி ஆகும் என்ற ஆர்வத்திலேயே இருந்துவந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை பேசிவருகிறார். இதுகுறித்து பேசிய அவர்,
”அவதூறுகளை அள்ளித்தெளிப்பதற்காக நான் வரவில்லை. நான் சொல்வதற்கு ஆதாரம் இருக்கும். நான் அணிந்திருக்கும் வாட்ச்சின் பெயர் ரபேல் வாட்ச். தசால்ட் ஏவியேஷன் என்ற ரபேல் விமானத்தைத் தயாரித்த பிரெஞ்சு நிறுவனம் தான் இந்த வாட்சைத் தயாரிக்கின்றனர். என்னிடம் இருக்கும் இது 147வது வாட்ச். இந்தியாவில் இந்த வாட்ச் 2 தான் விற்றுள்ளது. ஒரு வாட்சை மும்பையில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் Senior Executive கட்டியுள்ளார். 2வது வாட்ச் கோயமுத்தூரில் உள்ள ஜிம்சன் டைம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இடத்தில் விற்கப்பட்டுள்ளது. நான் இந்த வாட்சை மே மாதம் 27ம் தேதி வாங்கினேன்.
2வது வாட்சின் உரிமையாளர் கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பர். அவர் இதை 2021 மார்ச் மாதம் வாங்கினார். இந்தியாவிற்கு ரபேல் விமானம் வந்த சமயம், அதன் மீதான ஆர்வம் காரணமாக சேரலாதனையும், குறிப்பிட்ட வாட்ச், ஜிம்சன் டைம்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நான் ரபேல் வாட்சை வாங்கினேன். அதன் ரசீதை இணையத்தில் நான் வெளியிடுகிறேன். இதை 3 லட்சம் கொடுத்து வாங்கினேன். அதற்கான ரசீதையும் வெளியிடுகிறேன்.
நான் பெங்களூரில் டிசிபியாக இருந்த சமயம் இந்த வாட்ச் லஞ்சமாக வாங்கப்பட்டது என்று கூறுகிறார்கள் அது உண்மை இல்லை. இது தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் வாங்கப்பட்ட வாட்ச். சேரலாதன் 2 வருடங்களாக எனக்குத் தெரிந்த நண்பர் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் 1.3 கோடி மதிப்புடையது. நான் அவர்களைக் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் கேள்வி கேட்டார்கள். நான் அதற்கு பதில் சொல்கிறேன்.
அவர்கள்(திமுக) உண்மையான ஒரு சுத்த அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்று நினைத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் கடமையும், உரிமையும் உண்டு. நான் சுத்தமானவன், நேர்மையான அரசியலை முன்னெடுக்க வந்திருக்கிறேன் என்பதற்காக நான் என்னுடைய பில்லை இங்கு காட்டியுள்ளேன். என்னுடைய வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாம் நண்பர்கள் தான் தருகிறார்கள்” என்று கூறினார்.


























