வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பிக்பாஸ்கெட் டெலிவரி ஊழியர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ள நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உணவு மற்றும் மளிகைப் பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வியல் சிக்கல்களை நாம் பல்வேறு செய்திகளின் ஊடாகப் பார்த்துவருகிறோம். எத்தனையோ இளைஞர்கள் அலைந்து திரிந்து மேற்கொள்ளும் சிரமமான டெலிவரி பணியை குடும்ப வறுமை காரணமாக செய்துவரும் நிலையில், வாடிக்கையாளர்கள் டெலிவரி ஊழியர்களைத் தாக்குவதும், அவர்களை தரக்குறைவாக நடத்துவதுமான செய்திகள் வெளியாகி பரிதாபத்தைப் பெறும். டெலிவரி ஊழியர் என்ற காரணத்திற்காகவே தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் சில வாடிக்கையாளர்கள் நடத்துவது வேதனையளிப்பதாக பல ஊழியர்கள் கண்ணீர் சிந்துவர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் டெலிவரி பாய் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டுமொத்த டெலிவரி ஊழியர்கள் மீதான பரிதாபத்தை மாற்றி, அதீத கோபத்தை அவர்கள் மீது பொதுமக்களுக்கு வரவைத்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் பிக்பாஸ்கெட் சூப்பர்மார்க்கெட்டில் மளிகைப்பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அவற்றை அதன் ஊழியர் டெலிவரி செய்ய வரவே, வீட்டின் கதவுக்கு அருகிலிருக்கும் நாற்காலியில் அந்தப் பெண் வைக்கச்சொல்லி கூறியுள்ளார். ஆனால், அவர் ’பொருட்களை சமயலறையில் வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண் இதனால் திடுக்கிடவே, அவரை பொருட்களை ஹாலில் வைக்கச்சொல்லியும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியும் கூறியுள்ளார்.
அவர் இதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த பெண்ணின் அருகில் வந்து அவரது தோள்களின் மீது கைவைத்துள்ளார். உடனடியாகக் கூச்சலிட்டபடி அந்த பெண் ஹாலுக்கு ஓடிவந்து வெளியில் யாரையேனும் வரச்சொல்லி கத்தியுள்ளார். தொடர்ந்து அந்த நபர் ஹாலுக்கு வந்து முன்கதவை தாழிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணின் மொபைல் நம்பரைக் கொடுத்தால் வீட்டிலிருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளார். செய்வதறியாது திணறிய அந்தப் பெண், அவரது நண்பரை உடனடியாக அழைக்கவும், அந்த டெலிவரி ஊழியர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து அப்பெண் பிக்பாஸ்கெட் கஸ்டமர் கேருக்கு போன் செய்து புகாரளித்துள்ளார். அவர்கள் அந்நபரை பணியிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர். ஆயினும் இந்தப் பெண் அவரது மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கேட்கவே வெறும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து பிற தகவல்களைப் பகிர முடியாது என்று அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இத்தகவல்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அந்நபர் குறித்து, சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரங்களுடன் துரைப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்குள்ள ஒக்கியம் பகுதியின் ஜெயபால் என்ற 32 வயது நபரை காவலர்கள் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் தனது பதிவில், இதுபோன்று பொருட்கள் ஏதேனும் ஆர்டர் செய்தால் டெலிவரி பாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, டெலிவரி ஊழியர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வந்த சமயம், அவர்கள் வீட்டிற்கு பொருட்களை டெலிவரி செய்ய வந்தால் அவர்களை அமரவைத்து தண்ணீர் கொடுத்து உபசரிக்க வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இவ்வாறு ஒரு டெலிவரி ஊழியர் பாலியல் ரீதியாக அத்துமீறிய செய்தி பிற ஊழியர்கள் குறித்தும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது


























