விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’விடுதலை பாகம் 1’. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ சிறுகதையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், இயற்கை வளங்களைச் சுரண்டும் தொழிலதிபர்கள், அவர்களுக்குத் துணைபோகும் காவலர்களின் அட்டூழியம் மற்றும் இதற்கு எதிராகப் போராடும் மக்கள் நல அமைப்பின் தியாகங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது. காமெடி நாயகனாக சினிமாவில் தோற்றமளித்துவந்த சூரி, கதைநாயகனாக பரிணமித்து சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது படங்கள் மூலம் சொல்ல வரும் கருத்தை தனக்கே உரித்தான காட்சிகளுடன் பார்வையாளர்களை ஒன்றிப்போகவைக்கும் அளவுக்கு பதியவைப்பதில் கைதேர்ந்த வெற்றிமாறன் தனது 5 படங்களைத் தொடர்ந்து இதிலும் தனது முத்திரையை ஆழப் பதித்துள்ளார். படம் முடிந்தும் அதன் தாக்கத்திலிருந்து மீளமுடியாத வகையில் இயக்கப்பட்டுள்ள விடுதலை, பல தரப்பு பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டுகளைக் குவித்துவருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’விடுதலை’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சூரியின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ”விடுதலை, இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பு; இளையராஜா இசையில் என்றும் ராஜா; வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை; தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதை மேற்கோள்காட்டி நடிகர் சூரி ட்விட்டரில், ”என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே… நெஞ்சார்ந்த நன்றிகள்.. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பலரும் விடுதலை படத்திற்கான தங்களது பாராட்டுகளைப் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.


























