பாடகர் சின்மயி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து தனது குரலைப் பதிவுசெய்து வருகிறார். ’மீ டூ’ விவகாரத்தில், தான் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் குற்றச்சாட்டு வைத்த சமயம் முதல் இன்றுவரை, வலைதளங்களில் பல கேலிகளுக்கும் வசைகளுக்கும் உள்ளாகிவந்தாலும், துணிவுடன் தனது குரலை அவர் விமர்சனங்களை எதிர்த்துக் கொடுத்துவருகிறார்.
சின்மயி அவ்வப்பொழுது தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்த செய்திகளையும், தனிப்பட்டு தனக்கு சில பெண்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் பெயர் குறிப்பிடாமல் பதிவிடுவதுண்டு. அந்த வகையில், அண்மையில் அவர் ’நீங்கள் விரும்பிய கலையை விடும் அளவிற்கு, உங்கள் குருவால் உங்களுக்கு செய்யப்பட்ட/ சொல்லப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் என்ன?’ என்று இணையவாசிகளிடம் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பலரும் அதிரவைக்கும் படியான, வித்தியாசமான தங்களது பதில்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
இதுகுறித்து பெண் ஒருவர், ”நான் எனது 5 வயதில் கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். எனது குரு என்னை பாடலில் கமக்கங்கள் பாடச்சொல்லி வற்புறுத்தினார். ஆனால் எனக்கு அது வரவில்லை. உடனே அவர் எனது தொடையில் பலமாக பலமுறை அடித்தார். நான் விடாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். இந்த உடல் ரீதியான துன்புறுத்தல் என்னை அனைத்து விதமான இசையையும் வெறுக்கவைத்துவிட்டது” என்று குறிபிட்டுள்ளார்.
மற்றொரு பெண் ஆசிரியர் பணிபுரியும் கல்லூரியை கமெண்டில் மென்ஷன் செய்து, ”இவர் எப்பொழுதும் எங்கள் வகுப்பில் பாடம் செய்துவராத பெண்களை சிறுமைப்படுத்திக்கொண்டே இருப்பார். அலங்காரம் செய்ய நேரமிருக்கும் உங்களால் படித்துவர முடியாதா? என்று எங்களை எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துவார். இவரெல்லாம் எப்படி ஆசிரியர் ஆனார் என்று இன்றும் வியக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சில பதில்கள்:
பெண்: ’’என்னுடைய கதக் ஆசிரியர் நான் மிகவும் அசிங்கமாக இருக்கிறேன் என்றும் ஆண்மைத் தன்மையுடன் இருக்கிறேன் என்றும் என்னை நடனமாட சற்றும் பொருத்தமில்லாதவள் என்று கூறினார்’’
பெண்: ”பரதநாட்டியம் என்பது மரபணு ரீதியாக மனிதர்களுக்கு பரிசளிக்கப்படும் கலை என்று கூறி, நான் பார்க்க அசிங்கமாக இருப்பதாகவும், எனக்கு முகபாவங்களே வரவில்லை என்றும் எனது ஆசிரியர் கூறினார்’’
பெண்: ”நான் ஒரே நேரத்தில் இசை மற்றும் நடனம் கற்றுவந்தேன். அப்பொழுது என் இசை ஆசிரியர் என் அம்மாவிடம், நல்ல குடும்பத்துப் பெண்கள் நடனம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், என்னை நடனத்தை விடச்சொல்லியும் கூறினார். நான் அதன் பிறகு பாடுவதை நிறுத்திவிட்டேன்”
ஆணா, பெண்ணா தெரியவில்லை: ”என் குரு என்னிடம் காலையில் எழுந்து குரல்பயிற்சி செய்வது குரலுக்கு நல்லது என்றார். ஆனால் தினமும் காலையில் சுயஇன்பம் செய்வது என் பழக்கம் என்பதால் என் உரிமைக்கு அவர் இடையூறாக இருப்பதை வெறுத்து நான் இசை கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டேன்’’
இந்த கேள்விக்கு தற்சமயம் இணையத்தில் வைரலாகிவரும் நடிகை வினோதினி வைத்தியநாதன் அளித்த பதிலில், ”நான் அந்த குருவின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவர் நாடகத்துறையில் மிகவும் புகழ் பெற்றவர். ஒருமுறை என்னைப் பார்த்து, ’நீ ஒரு பெண்ணாக இருந்தும் உனக்கு சரியாக புடவை கட்ட வரவில்லை’ என்று என்னை பலர் முன் அசிங்கப்படுத்தினார். அவர் இன்று உயிருடன் இல்லை; எனக்கு ஒரு கையை பின்னால் கட்டிக்கொண்டு ஒரு கையை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு கூட புடவை கட்டத் தெரியும் என்பது தான் இதில் வேடிக்கை” என்று கூறியுள்ளார்.
மேலும் பெரும்பாலானோர் தங்களது உடல்வாகு மற்றும் முக அமைப்பு நன்றாக இல்லை என்று குரு தங்களை கேலி செய்த காரணத்தாலேயே நடனத்தையும், பிற கலைகளையும் விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் சில ஆண்களும் இதற்கு பதில் பதிவு இட்டுள்ளனர்.


























