பிரித்விராஜ் நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் உருவாகியிருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் வெப்பம் படர்ந்த டிரெய்லர் வெளியாகி இரத்தம் உறையவைத்துள்ளது.
மலையாளத்தில் ’தன்மாத்ரா’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’ஆடுஜீவிதம்’(The Goat Life). பிரித்விராஜ், அமலாபால், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை Visual Romance Image நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ஆஸ்கர் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி முறையே இப்படத்திற்கு இசை மற்றும் ஒலிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான யென்யாமின் எழுதிய ’ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இப்படம் உருவாகியுள்ளது. சவூதி அரேபியா நாட்டில் ஒட்டகம், ஆடு மேய்க்கும் பணிக்காகச் செல்லும் ஒரு பட்டதாரி இளைஞன் அங்கு என்னவெல்லாம் சிரமங்களைச் சந்திக்கிறான் என்னும் கொடூர வாழ்க்கையின் உண்மைப் பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், இதன் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தன் இணை அமலாபாலை விடுத்து சவுதி அரேபியாவிற்குச் செல்லும் கதாநாயகன் பிரித்விராஜ், அங்கு சிக்கிக்கொண்டு வெப்பம் தகிக்கும் பாலைவனத்தில் தண்ணீருக்காக அலைவதாக டிரெய்லரில் காண்பிக்கப்படும் காட்சிகள் நம் இதயத்தை உறையவைக்கின்றன.
அழகான ஒரு இளைஞனின் தோற்றத்தில் அங்கு வேலைக்குச் சென்று, சில காலம் கழித்து தன்னையே தனக்கு அடையாளம் தெரியாமல் போகும் அளவிற்கு உருமாற்றம் அடைந்து வேதனைப்படும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பால் மனதை பிசையவைக்கிறார் பிரித்விராஜ். இதுபோன்ற இன்னும் கனம் கூட்டும் பல காட்சிகள் டிரெய்லரில் இடம்பிடித்து படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விருதுகளை வாரிக்குவித்து கவனிக்கவைத்த கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஆடுஜீவிதம்’ தரமான பேசப்படும் படைப்பாக இருக்கும் என்று சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


























