தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தின் கும்மடிதாலா பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்சார கேபிள்கள் மற்றும் பம்பு செட் ஆகியவற்றைத் திருடியதாகக் கூறி தலித் நபர் ஒருவரை விவசாயிகள் 7 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட நபர் கும்மடிதாலா பகுதியில் வசித்துவரும் 39 வயது மதிக்கத்தக்க மல்லேஷம் என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுதாகர், கும்மரி மல்லேஷ், சஞ்சீவ் ரெட்டி, கே.மல்லேஷ், ஆஞ்சனேயுலு, ஸ்ரீனிவாஸ், பீரப்பா என்ற 7 கோடூரர்களால் நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறையில் சம்பவ இடத்திலேயே மல்லேஷா படுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மல்லேஷாவை அந்த கிராமத்தில் உள்ள உள்ளூர் விவசாய சங்க அலுவலகத்திற்கு இழுத்துச் செல்வதற்கு முன்பும், அங்கு இழுத்துச் சென்ற பிறகும் கோடூரமாகத் தாக்கியுள்ளனர். மல்லேஷம் தாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வரவே சம்பவ இடத்திற்குச் சென்று அவர்கள் பார்க்கையில் மல்லேஷம் அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்துகிடந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மல்லேஷாவின் மனைவி காவலர்களை அணுகி அவரைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியுள்ளார். அவர் ஒருவேளை பொருட்களை திருடியிருந்தால் அவரை போலீசாரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், அதற்கு பதிலாக இரக்கமின்றி கொன்ற அவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் மல்லேஷாவின் மனைவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் அடைப்படையில், குற்றவாளிகள் மீது சங்கரெட்டி போலீசார் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவு 3(2)(V) மற்றும் ஐபிசி பிரிவுகள் 342 (தவறான சிறைவைப்பு), மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்ற மாதம் அங்கு நடைபெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிய நிலையில், நேற்றைய தினம் குற்றவாளிகள் 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி சான்றிதழையும் போலீசார் பெற்றுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கும்மடிதாலா கிராமத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.


























