TNPSC Group – 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், முறைகேடு எழுதும் நிகழவில்லை என்று TNPSC தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Group – 4 தேர்வின் முடிவுகள் மார்ச் 24ம் தேதி வெளியாகின. இந்நிலையில், இத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்ட தேர்வர்களும், தென்காசியைச் சேர்ந்த பயிற்சி மையத்தில் 2000க்கும் மேற்பட்ட தேர்வர்களும் தேர்ச்சி பெற்றது சர்ச்சையான நிலையில், இதில் முறைகேடு நட்ந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் இதைத்தொடர்ந்து இதுபற்றி நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் சட்டப்பேரவையில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”தேர்வர்கள் தங்களுடைய OMR தாள்களை பெற்ற பின்னர் தவறு இருந்தால் புகார் தரலாம். காலி பணியிடங்களை நிரப்பிய பின் OMR தாள்கள் இணையத்தில் பதிவேற்றப்படும். முறைகேடு என புகார் வந்தால் மட்டுமே கவனத்தில் கொள்வோம். ஸ்டெனோ பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு. தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் இருந்து ஸ்டெனோ பணிக்கு 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடு என புகார் வரவில்லை.
ஒரு பகுதியில் அதிகமான நபர்கள் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்திற்காக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு. கடந்த காலங்களிலும் இதுபோன்று ஒரு பகுதியில் தேர்ச்சி அதிகமாக இருந்துள்ளது. அதற்கு உதாரணமாக காஞ்சிபுரம், சங்கரன்கோவில் பகுதிகளை கூறலாம். எனவே குரூப் 4 தட்டச்சர் தேர்வில் சங்கரன்கோவில் பகுதியில் 450 பேர் தேர்ச்சி என்ற தகவலில் எந்தவித முறைகேடும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.


























