அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வேண்டி தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்துள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.
கஞ்சா கருப்பு தற்சமயம் அரசியல் சார்ந்த நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். எளிய பின்னணியிலிருந்து வந்து சினிமாவில் தனக்கென தனி அடையாளத்துடன் நகைச்சுவைக் கலைஞராக வளர்ந்துவந்த கஞ்சா கருப்பு, ’வேல்முருகன் போர்வெல்ஸ்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி சினிமாவில் தான் சேர்த்த மொத்த பணத்தையும் இழந்தார். பின் ஒரு சில படங்களில் தலைகாட்டிவந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டார். அதுவும் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்பதால் ஒரு சில படங்களில் தற்சமயம் நடித்துவருகிறார். அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி அடுத்ததாக தமிழக முதல்வராகவேண்டும் என்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, பூக்கூடை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இவருடன் சேர்ந்து இவரது மனைவி பால் குடம் சுமந்தும், அவரது மகள் வேப்பிலை உடை அணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேர்த்திக்கடனை முடித்து செய்தியாளர்களைச் சந்தித்த கஞ்சா கருப்பு, ’’ஆளுங்கட்சி பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையேயில்லை. அது மக்களுக்கே தெரியும். இன்றைய காலகட்டத்தில் மின்சாரக் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. எனவே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிகழவேண்டும் என்று வேண்டிக்கொண்டும், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவேண்டும் என்றும் குடும்பத்தோடு தீச்சட்டி ஏந்தி வேண்டிக்கொண்டேன்” என்று பேசினார்.


























