கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், KGF தொகுதியைக் கைப்பற்ற ஆதரவு தெரிவிக்கவேண்டி பா.ரஞ்சித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 124 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஆட்சியை இந்த முறை தக்கவைத்தாகவேண்டும் என்று பாஜகவும், ஆட்சியைப் பிடித்தாகவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடகாவின் KGF தொகுதியைக் கைப்பற்ற அங்கு இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜேந்திரனுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ”KGF மக்கள் வரும் தேர்தலில் RPI கட்சியின் தலைவர் அண்ணன் எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெற ஆதரவு அளிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுபற்றி பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”கேஜிஎஃப் தமிழக மக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக ராஜேந்திரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே நம்மிடம் இருந்ததை நாம் இழந்து வருகிறோம். இழந்ததை திரும்ப கைப்பற்றியாகவேண்டிய கட்டாயம், சூழல் கேஜிஎஃப் தமிழர்களுக்கு உள்ளது. நம்மிடம் உள்ள பலத்தை மீண்டும் நிரூபிக்க முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது. இந்த முறை அண்ணனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும். நம்மிடம் கட்சி, கருத்தியல் சார்ந்து எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு நம்முடைய அரசியல் உரிமைகளை பெற ராஜேந்திரன் அண்ணனை சட்டமன்றம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளது. என்னுடைய முழு ஆதரவும் அவருக்கு உள்ளது. நீங்களும் அவரை ஆதரிக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.


























