மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும், இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இரண்டாவது G20 நிதிஅமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கவும் வாஷிங்டன் சென்றிருந்தார். அப்போது கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் தலைவர் ஆடம் எஸ்.போசனின், ‘எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அந்தஸ்தை இழப்பது குறித்தும், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது குறித்தும் மேற்கத்திய ஊடகங்களில் பரவலான செய்திகள் வந்தனவே?’ என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய நிர்மலா சீதாராமன்,
”உலகில் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகையை இந்தியா கொண்டுள்ளது; மேலும் அந்த மக்கள்தொகை எண்ணிக்கையில் மட்டுமே அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் அன்றாட வாழ்க்கை கடினமாக உள்ளது அல்லது அரசின் ஆதரவுடன் கடினமாக உள்ளது என்று பெரும்பாலான பதிவுகளில் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் கேட்கிறேன், இப்படியான வன்முறைகள் இந்தியாவில் நிகழ்ந்திருந்தால் 1947ல் இருந்ததை விட முஸ்லீம் மக்கள் தொகை பெருகியிருக்குமா?”
சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது உருவான அண்டை நாட்டின் பெயரை எடுத்துக்கொள்வதாகக் கூறி பாகிஸ்தானை கடுமையாக சாடிய சீதாராமன், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக உறுதியளித்த இஸ்லாமிய நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டாலும், பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மைக் குழுவும் எண்ணிக்கையில் குறைந்துவிட்டதாகவும், சில முஸ்லீம் பிரிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ”முஹாஜிர்கள், ஷியாக்கள் மற்றும் நீங்கள் பெயரிடக்கூடிய ஒவ்வொரு குழுவிற்கும் எதிராக பாகிஸ்தானில் வன்முறை நிலவுகிறது, ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சன்னி முஸ்லிம்கள் நிலை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லீம்களும் தங்கள் வியாபாரத்தை சுதந்திரமாகச் செய்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தியாவில் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் மறுத்துப் பேசிய அவர், ’’இந்தியா முழுவதும், முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் வன்முறைகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தால் அது ஒரு தவறான அறிக்கையாகும். அப்படிக் கூறுவது இந்திய அரசின் பழிபோடுவது போன்றது. 2014 முதல் இன்று வரை மக்கள் தொகை குறைந்துள்ளதா? எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திலாவது விகிதாச்சாரத்தில் இறப்புகள் அதிகமாக இருந்ததா? எனவே, இந்த அறிக்கைகளை எழுதும் இவர்களை இந்தியாவிற்கு வருமாறு நான் அழைக்கிறேன். நான் அவர்களுக்கு விருந்தளிக்கிறேன். அவர்கள் இந்தியாவிற்கு வந்து தங்கள் கருத்தை நிரூபிக்கட்டும்.” என்று பேசினார்.


























