வெளிநாட்டு நிதிகளால் தூண்டிவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாக சர்ச்சைக்குறிய கருத்துகளை ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளர்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து ஒரு சார்புடைய, சர்ச்சையான கருத்துகளைத் தொடர்ந்து அவர் பேசிவருகிறார். தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத மத ரீதியிலான, இந்துத்துவ கருத்துகளை அவர் தொடர்ந்து வலியுறுத்துவது பலரிடையே கண்டனங்களைப் பெறும். அப்படி, அவர் தற்சமயம் நிலுவையிலுள்ள தீர்மானங்கள் குறித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது குறித்தும் பேசியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்துயுள்ளது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்ரவி கலந்துரையாடும் ’எண்ணித் துணிக’ நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”கூடங்குளத்தில் அணு உலை அமைக்கப்படும் போது போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. கேரள மாநிலம் விளிஞ்சத்தில் அதானியின் துறைமுகம் அமைக்கப்படும்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் வெளிநாட்டு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைதான். வெளிநாட்டு நிதி உதவி மூலமாக மக்களை தூண்டிவிட்டு அதை மூடிவிட்டார்கள்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்தே பெரும்பாலான நிதி கிடைத்து வந்தது. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்ற 90 பேரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பே அனுப்பி உள்ளது” என்று சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ”ஆளுநர் ஒரு தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டது என்று பொருள்” எனவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இவரது பேச்சுக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


























