போப் பிரான்சிசின் பதில்கள் என்ற ஆவணப்படத்தில் பாலுறவு, ஒருபாலீர்ப்பு குறித்த அவரது பதில்கள் இணையத்தில் கவனம்பெற்று வருகின்றன.
பாலுறவு மற்றும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய ’போப்பின் விடைகள்’ என்ற ஆவணப்படம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் 20 வயதை அடையும் தருவாயிலுள்ள 10 நபர்களுடன் 86 வயதான போப் பிரான்சிஸ் நிகழ்த்திய கலந்துரையாடல் மற்றும் அவர்களுக்குள் நடந்த கேள்வி-பதில்கள் காணொலியாக வெளியிட்டப்பட்டுள்ளது.
இதில், மனிதர்களுக்கிடையேயான பாலியல் உறவு, தன்பாலினத்தவர்களின் உரிமைகள், ஆபாசப் படங்கள், கருக்கலைப்பு, கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல தலைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும் இவை குறித்து போப் பேசியுள்ளார்.
“பாலுறவு என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்றாகும்” என்று போப் அந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார். மேலும் “பாலியல் ரீதியாக உங்களை வெளிப்படுத்துவது ஒரு செல்வம் போன்றது. எனவே உண்மையான பாலியல் வெளிப்பாட்டிலிருந்து விலக்கும் எதுவும் உங்களை பாலியல் ரீதியான செழுமையிலிருந்து குறைக்கிறது” என்று சுயஇன்பத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
“Non-Binary நபர் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, “LGBT மக்கள் கத்தோலிக்க திருச்சபையால் வரவேற்கப்பட வேண்டும்” என்று அவர் பதிலளித்துள்ளார். மேலும் அவர், ’’எல்லா மனிதர்களும் கடவுளின் குழந்தைகள். கடவுள் யாரையும் நிராகரிப்பதில்லை. கடவுள் ஒரு தந்தை. மேலும் சர்ச்சில் இருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை’’ என்று பதில் கூறியுள்ளார்.
கருக்கலைப்பு குறித்து, ’’கர்ப்பத்தை கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் இருக்க வேண்டும்’’ என்று அவர் கூறினார். ஆனால் இது நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகக் கருதப்படுவடுவதாகவும் போப் தெரிவித்தார்.
போப்பின் கருத்துக்கள் ’L’Osservatore Romano’ என்ற வாட்டிகனின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. மேலும் இளைஞர்களுடனான அவரது இந்த உரையாடலை “மனம்திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்” என்று தனது செய்தித்தாளில் அப்பத்திரிக்கை விவரித்தது.


























