கடந்த திங்கட்கிழமை நான்கு பயணிகளுடன் சுமார் 11,000 அடி உயரத்தில் பீச்கிராஃப்ட் விமானம் இங்கிலாந்தின் வோர்செஸ்டர் பகுதியிலிருந்து தென்னாஇரிக்காவின் நெல்ஸ்ப்ரூட் வரை பயணமாகிக்கொண்டிருந்த சமயம், அதை இயக்கிக்கொண்டிருந்த விமானி ருடோல்ஃப் எராஸ்மஸ் முதுகில் ஏதோ வித்தியாசமாக ஊர்வதை உணர்ந்துள்ளார்.
எராஸ்மஸ் 5 வருடங்களாக விமான ஓட்டியாக இருந்துவருகிறார். அவருக்கு இதற்கு முன்னதாக தண்ணீர் பாட்டில்களிலிருந்து நீர் முதுகில் சொட்டி குளிர்விக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளதால், அந்த அனுவத்தை வைத்து இதுவும் ஏதோ பாட்டிலிலிருந்து சொட்டும் நீர் என்று சாதாரணமாக இருந்துள்ளார். பின்னர் தான் அவர் கீழே கவனித்த சமயம் கேப் வகை ராஜநாகம் அவரது இருக்கைக்குக் கீழே நெளிந்துள்ளது.
பின்னர் விமானத்தை பத்திரமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள வெல்கம் நகரில் தரையிறக்கியாகவேண்டிய கட்டாயத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறையை அவர் தொடர்புகொள்கிறார். அடுத்த 15 நிமிடங்களுக்கு அவர் விமானம் ஓட்டியாகவேண்டிய சூழலில் இருந்த அச்சமயம் அந்த பாம்பு அவரது காலை கெட்டியாக சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறது.
விமானம் தரையிறங்கிய நிலையில், கட்டுப்பாட்டு அறை மூலம், பாம்பு பிடி வீர்ரகளுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து 38 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமான போக்குவரத்து நிபுணரான எம்மனிஸ் கூறுகையில், ”விமானத்தை சமயோசிதமாக இயக்குவதில் எராஸ்மஸ் ஒரு சாதனையே செய்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் விமானப் பயணத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. தப்பித் தவறி அந்தப் பாம்பு அவரைக் கடித்திருந்தால் இவர் இறந்து கூட போயிருக்கலாம்” என்று பேசினார்.
”அச்சமயம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று என் மூளையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒரு நிமிடம் நான் திகைத்து ஆடியே அசைவற்றுப் போய்விட்டேன்” என்று அந்த அனுபவத்தைப் பற்றி எராஸ்மஸ் குறிபிடுகிறார். கேப் வகை ராஜ நாகங்கள் ஆப்பிரிக்காவின் மிகவும் கொடிய விஷமுடைய பாம்புகள். அவற்றின் நஞ்சு அதிக வீரியம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இதில் விஷயம் என்னவென்றால், இரண்டு நாட்கள் தேடியும் பாம்பு பிடி வீர்ரகளால் அந்த கேப் நாகத்தை கண்டுபிடிக்கமுடியவில்லையாம். அது வெல்கம் விமான நிலையத்தில் விமானம் நின்றவுடன் எங்கேயாவது சென்றிருக்கலாம் அல்லது எங்காவது பதுங்கியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து விமானி எராஸ்மஸ் அதிலிருந்து எப்பொழுது விமானப் பயணம் மேற்கொண்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குளிருக்கு அனியும் கோட், இருக்கையை சுற்றி போர்வை, தீயணைப்பான் மற்றும் பூச்சி விரட்டிகளை எடுத்துச் செல்வதாக கூறிகிறார்.


























