கலாக்ஷேத்ராவின் ஆசிரியர்கள் குறித்து தவறாகப் பேசச்சொல்லி தனக்கு அழைப்புகள் வருவதாகவும், தன்னை சங்கி என்று வலைதளங்களில் அழைப்பதாகவும் நடிகை அபிராமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கல்லூரியில் பெண்களுக்கு எதிராக அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் பாலியல் தொல்லை கொடுக்கபடுவதாக பகீரவைக்கும் தகவல்கள் வெளியாகின. பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சினை அங்கு இருந்துவந்ததாகவும், தற்சமயமே அது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஹரி பத்மன், சாய் கிருஷ்ணன், சஞ்சித் லால், ஸ்ரீ நாத் ஆகிய ஆசிரியர்கள் நால்வரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அக்கல்லூரியின் முன்னாள் மாணவியான நடிகை அபிராமி, குற்றம்சாட்டப்பட்ட கலாக்ஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியது கடும் கண்டனங்களைப் பெற்றது. கலாக்ஷேத்ரா என்ற பெயர் கூட உச்சரிக்க வராதவர்களெல்லாம் அது பற்றி தவறாகப் பேசுவதாகவும், ஒரு தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு கலாக்ஷேத்ரா நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க இவ்வாறு செய்திகள் பரப்பப்படுவதாகவும் இவர் பேசியது எதிர்ப்புகளைச் சம்பாதித்தது.
இதைத்தொடர்ந்து, தன்னை வலைதளங்களில் அனைவரும் சங்கி என்று சொல்வதாகவும், ஹரி பத்மன் மிகவும் நல்ல ஆசிரியர் என்றும் மீண்டும் சர்ச்சைக்குறிய கருத்துகளை அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”நான் கலாக்ஷேத்ராவுக்கு ஆதரவாகப் பேசுவதால் என்னை சங்கி என்று அழைக்கின்றனர். அங்கு பணிபுரியும் பிற ஆசிரியர்கள் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக பேசவைக்கப்படுகின்றனர். என்னையும் தொடர்பு கொண்டு ஹரி பத்மன் குறித்து தவறாகப் பேசச்சொல்லி வற்புறுத்தினர்.
ஹரி சார் ஒரு ஆசிரியராக மிகவும் சிறந்தவர். அவர் மீதான பொறாமையின் காரணமாகவே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஹரி சார் PG மாணவர்களுக்கு மட்டும் தான் வகுப்பெடுக்கிறார். அதில் மொத்தமே 6 பேர் தான் இருப்பார்கள். 4 மணி நேரங்கள் தான் வகுப்பே இருக்கும். ஆனால் இதற்காக சுமார் 100 மாணவிகள் வரை போராட்டம் மேற்கொள்கின்றனர். அந்த 4 மணி நேரம் தவிர்த்தும் மாணவிகளை ஹரி சார் பார்த்துக்கொண்டே இருப்பாரா என்ன?
நான் யார் தூண்டிவிட்டும் என்னுடைய கருத்துகளைக் கூறவில்லை. நானாக செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கலாக்ஷேத்ரா குறித்த என்னுடைய தனிப்பட்ட கருத்துகளை கூறினேன். அதற்காக இந்த குற்றச்சாட்டின் முக்கியப் பிரச்சினையை விட்டுவிட்டு என்னை அனைவரும் திட்டுவதும், வலைதளங்களில் கேலிசெய்வதும் எந்த விதத்தில் நியாயம். கலாக்ஷேத்ராவில் உயர்பதவிகளில் அடுத்து யார் வரவேண்டும் என்ற போட்டி நிலவிக்கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக தான் ஹரி சார் மீது இந்த குற்றச்சாட்டுகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன“ என்று தெரிவித்துள்ளார்.


























