நம்மில் பலரும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் சில ஆண்டுகள் அங்கு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு வேறொரு நிறுவனத்தில் போய் வேலைக்குச் சேர்வதுண்டு. இது அனுபவத்திற்கான காரணமாகவும் இருக்கலாம், அல்லது அங்கு பிற ஊழியர்கள் மற்றும் பணிச்சுமையால் சந்திக்கும் பிரச்சினைகளாலும் இருக்கலாம். ஒருவேளை அங்கு எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து நீடித்துவிடும் நிலையில், நிறுவனத்தின் அத்தனை சலுகைகளையும் பெறமுடியும். அப்படி, ஒரு நிறுவனத்தில் நீடித்தது மட்டுமின்றி தனது சிறப்பான பங்களிப்பையும் அளித்த காரணத்தால் அந்த ஊழியருக்கு பெரும் பரிசு ஒன்றை அளித்து அந்நிறுவனம் அதிரவைத்துள்ளது.
லினீஷ் கன்னரன் என்ற நபர், தாஸ் மேன்பவர் ஏஜென்சீஸ் என்ற நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிவருபவர். 2012ம் ஆண்டு Fresher-ஆக அங்கு பணிக்குச் சேர்ந்த லினீஷ் தனது பணியில் புதிய உத்திகளையும், உழைப்பையும் கொட்டித் தந்து நிறுவனத்தை லாபத்தில் இயங்க பெரிதும் உதவியுள்ளார். இதனால் நிறுவனத்தின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். நிறுவனமும் அதிக லாபத்தை தொழிலில் ஈட்டியுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளாக நிறுவனத்திற்காக தனது கடின உழைப்பைக் கொட்டிய லினீஷை அங்கீகரிக்கும், பாராட்டும் விதமாக அந்நிறுவனம் ரூ.22 லட்சம் தொகையை அவருக்கு லாபத்தின் ஒரு பகுதியாகத் தந்து அதிரவைத்துள்ளது. ஒரு நிறுவனத்தில் தனது உழைப்பை பிரதிபலன் பாராமல் தன்னுடைய மற்றும் நிறுவனத்துடைய முன்னேற்றத்திற்காக தருவதால் விளையும் நன்மையை தற்சமயம் லினீஷ் அறுவடை செய்துள்ளார்.
இச்செய்தியைக் குறிப்பிட்டு இணையவாசிகள் பலரும், ’இந்த நிறுவனம் எங்கு உள்ளது, பேசாமல் அங்கு போய் வேலைக்கு சேர்ந்துவிடலாம்’ என்றும், ’என் முதலாளியின் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும்’ என்றும் நகைச்சுவையாகக் கருத்திட்டு லினீஷுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.


























