கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு தான் ஆளானதாக பாடகர் சின்மயி ’மீ டூ’ மூலம் தெரிவித்ததில் இருந்து, சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பல பெண்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுத்து வருகிறார். பாலியல் குறித்த குற்றச்சாட்டுகளில் அதிகம் பாதிக்கப்படுவது அநீதி இழைக்கப்பட்ட பெண் தான் என்ற அபத்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாக, இதை வெளிப்படுத்தியதிலிருந்து பாடகர் சின்மயி வலைதளங்களில் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகியும் வருகிறார். ஆனாலும், துணிச்சலாக எதையும், யாரையும் எதிர்த்து அவர் சுருசுருப்பாக வலைதளங்களில் இயங்கிவருகிறார்.
அவர், கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த சமயம் பலராலும் அவரை நோக்கி எரியப்பட்ட ஒரு அபத்தக் கேள்வி, ’அப்போவே சொல்லிருக்கலாம்-ல’ என்பது தான். பாலியல் துன்புறுத்தல் ஒரு ஆணால் பென்ணுக்கு நிகழ்த்தப்படும் சமயம், அது பாலியல் துன்புறுத்தல் தானா?, இதை வெளிப்படுத்துவதால் என்ன விளைவுகள் தனக்கு எதிராக நிகழலாம்? என்ற ஆயிரக்கணக்கான கேள்வி, ஒருவருக்கு, அதுவும் பெண்ணுக்கு எழுவதில் தவறில்லை என்றாலும் சமூகம் அதை வெகு இயல்பாக இட்டுக்கட்டிச் சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடும்.
அப்படி, வலைதளத்தில் தன்னை பின்பற்றும் ஒருவர் பாடகர் சின்மயிக்கு தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வு குறித்து எழுதி அனுப்பியுள்ளதை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், ”என் அம்மாவின் சகோதரரான தாய் மாமா என்னைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது அம்மாவிடம் இதுபற்றி என்னால் பேசமுடியவில்லை. குடும்பத்தினர் எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்தால் அவர் எனக்குப் பாதுகாப்பாக இருப்பார் என்று எண்ணி அம்மா என்னை அவருடனே விட்டுச்செல்வார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் அவரை என் அப்பாவைப் போலவே நினைத்தேன். நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக எனக்குத் தெரிந்த சமயம் அம்மாவிடம் இதுபற்றி பேச முடியவில்லை. பேசுவதுதான் சரி என்று புரிய பல வருடங்கள் ஆனது.
அச்சமயம், நான் என் அம்மாவிடம் இதுபற்றி சொன்னபோது, அவர் கேட்காதது போல் நடித்தார். தலையை அசைப்பது போல் சைகை செய்துவிட்டு சாதாரணமாக நகர்ந்தார். இது காலப்போக்கில் அதுபற்றிய என் வலியைக் குறைக்காது தான். அருவருப்பும், வெறுப்புமான மனநிலையே எனக்கு நீடிக்கிறது. தனக்காகவும் அனைத்து பெண்களுக்காகவும் பேசும் எவருக்கும் அதற்கான சக்தி வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்” இவ்வாறு அப்பெண் எழுதியிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு, ’இதை யாராவது அப்போவே சொல்லிருக்கலாம்-ல என்ற கும்பலுக்கு அனுப்புங்கள்’ என்று சின்மயி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் உறவினர்களாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது பெற்றோருக்குத் தெரிந்தும் அவை கண்டிக்கப்படுவது இல்லாமல், கண்டுகொள்ளப்படாமல் போவதே அதிகம் என்றும், எதையும் வெளிப்படையாகச் சொல்ல சூழலைப் பொறுத்து கால அவகாசம் தேவைப்படும் என்பதையும் அந்தப் பெண்ணின் பதிவிலிருந்து சின்மயி சுட்டிக்காட்டியுள்ளார். இவரது பதிவிற்கு பலரும் ஆதரவளிக்கும் விதமாக கருத்திட்டு வருகின்றனர்.


























