இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள புர்கா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரையில் ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சர்ஜூன். தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’, நவரசாவின் ‘துணிந்த பின்’ அத்தியாயம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவரது புதிய படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘புர்கா’.
கலையரசன், மிர்னா, சூரிய நாராயணன், ஜி.எம்.குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை SKLS Galaxy Mall சார்பில் மோகன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதன் டிரெய்லர் தற்சமயம் வெளியாகி கவனிக்கவைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் அரிதாக வரும் கதையமைப்புகளைப் போன்று, ஓர் இஸ்லாமிய பெண்ணின் வாழ்வியலை மையமாக வைத்து கதை நகர்வது போல் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன. இஸ்லாத்தைச் சேர்ந்த மிர்னா வீட்டில் சூர்யாவான கலையரசன் தஞ்சம் புகுவதும், மிர்னாவின் நம்பிக்கைகள் மற்றும் சலிப்பான வாழ்க்கை குறித்து கேள்வியெழுப்பி மிர்னாவை சிந்திக்கவைப்பதுமான காட்சிகளை டிரெய்லர் கடத்துகிறது.
’புர்கா’ என்ற தலைப்பின் படி இஸ்லாமிய பெண்கள் உண்மையில் புர்கா-வை விருப்பப்பட்டு பாதுகாப்பு கவசமெனக் கருதி உடுத்துகின்றனரா? அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் புர்கா உடை திணிக்கப்படுகிறதா? என்ற பாணியில் கதை நகரலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு கர்நாடகாவில் புர்கா அணிந்த பெண்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையான நிலையில், உச்சநீதிமன்றம் பள்ளி போன்ற இடங்களில் புர்கா, ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைக் காண்பிக்கும் உடைகளுக்கு அனுமதியில்லை என்று தீர்ப்பு வெளியானது குறித்த காட்சிகள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே வெள்ளித்திரைக்கு முன்பாக சர்ஜூன் இயக்கத்தில் வெளியான ’லட்சுமி’ மற்றும் ’மாம்’ ஆகிய குறும்படங்கள் பெண்கள் குறித்த அதிகம் பேசப்படாத முக்கிய விஷயங்களை கதைக்களமாகக் கொண்டு வெளியாகி பாராட்டுகளையும், அதே சமயம் சர்ச்சைகளையும் சந்தித்தன. அந்த வகையில் புர்கா படமும் லட்சுமி, மாம் பட வரிசைகளில் ஒரு முக்கிய விஷயத்தை சமூகத்திடம் பேசும் என எதிர்பார்க்கலாம். இப்படம் வரும் 7ம் தேதி ’ஆகா’ ஒடிடி தளத்தில் வெளியாகிறது.


























