தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கில் காதலன் அவரது திருமண பரிசில் வெடிகுண்டு வைத்து அனுப்பியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காதல் என்ற புனித உணர்விற்கு நியாயம் சேர்க்க முடியாததாகத்தான் இன்றைய நவீன காதலர்களின் முதிர்ச்சியற்ற தன்மை உள்ளது. காதல் தோல்வியில் முடிந்தால் கடினமாகவே இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை கவனிக்கவேண்டுமே தவிர காரணமானவர்கள் மீது வன்முறையைக் கையாளக்கூடாது என்ற அறம் நமக்குக் கற்பிக்கப்பட்டாலும், காதல் முறிவுக்குக் காரணமான பெண் மீது ஆசிட் வீசுவது, கூலிப்படையை ஏவிக் கொலை செய்வது உள்ளிட்ட அசம்பாவிதங்கள் காதலை பற்றி அறியாத கயவர்களால் கட்டவிழ்க்கப்படத்தான் செய்கின்றன. அப்படி ஒரு நபர் தனது காதலியை பழிவாங்க எண்ணி செய்துள்ள ஒரு குரூரக் செயல் இரண்டு உயிர்களை பலிவாங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் கபீர்தம் மாவட்டத்தில், முன்னாள் காதலியின் மீதான வன்மம் காரணமாக அவரது திருமணத்திற்கு காதலன் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஹோம் தியேட்டரை பரிசாக அனுப்பியுள்ளான்.
இதை அறியாத மாப்பிள்ளை ஹேமேந்திர மேராவி, பரிசாக வந்த ஹோம் தியேட்டரை சுவரில் மாட்டி மின்சார இணைப்பு கொடுத்து ஆன் செய்துள்ளார். அப்போது அதிலிருந்து வெடிகுண்டு வெடித்து மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஹோம் தியேட்டர் பொருத்தப்பட்டிருந்த சுவர், மேற்கூரை மற்றும் அறை முழுவதும் வெடித்து நாசமானது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், காதலி தன்னை விடுத்து வேறொருவரை திருமணம் செய்துகொள்ளவிருந்ததன் காரணமாக சர்ஜூ என்ற நபர் இச்சதியைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


























