பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக தற்சமயம் நடிகை அபிராமி பேசி வெளியாகியுள்ள வீடியோ பலரது கண்டனங்களையும் பெற்றுவருகிறது.
திருவான்மியூரில் இயங்கிவரும் கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனத்தில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் இந்த பிரச்சினை மாணவிகளுக்கு சுமார் 10 ஆண்டுகளாகவே இருந்துவருவதாக அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகின.
இதைத்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கைதுசெய்யக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஹரி பத்மன் ஆகிய 4 ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், கலாக்ஷேத்ரா என்ற சொல் வாயில் வராதவர்கள் எல்லாம் கலாக்ஷேத்ரா நிறுவனம் குறித்து குற்றம் சுமத்துவதாக அக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகையுமான அபிராமி பேசியுள்ளது கண்டனங்களைப் பெற்றுவருகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவி. எனக்கு ஏன் இந்தப் பிரச்சினை குறித்து பேச விருப்பமில்லையென்றால், எப்பொழுதும் ஒருதரப்பு கதையை மட்டும் கேட்கக்கூடாது. நிறைய பேர் ஒருதரப்பு தகவல்களை மட்டும் கேட்டுவிட்டு அவர்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர். 89 வருடங்களாக இயங்கிவரும் எங்கள் கல்லூரியில் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்குமளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், இந்த ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு யார் யாரோ கலாக்ஷேத்ரா பற்றி கமெண்ட் செய்கிறார்கள்.
இங்கு கல்வி பயிலாதவர்கள், ’கலாக்ஷேத்ரா’ என்ற பெயரை சரியாக உச்சரிக்கக்கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இதைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். இங்கு பயின்ற மாணவியாகக் கூறவேண்டுமென்றால், கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கவேண்டியே இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஒருதரப்பு தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இவ்வாறெல்லாம் குற்றம் சுமத்துகிறார்கள் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
இவரது பேச்சை நெட்டிசன்கள் வலைதளங்களில் பங்கமாகக் கலாய்த்துவருகின்றனர். மேலும் இவருக்கு எதிராக பல மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு தரப்பிலிருந்து மட்டுமே குற்றம் குறித்து கேட்டுள்ளதாக அபிராமி பேசியுள்ள நிலையில், இதில் ஈடுபட்ட ஆசிரியர் தான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளதை நெட்டிசன்கள் மேற்கோள் காட்டுகின்றனர். மேலும் கலாக்ஷேத்ராவில் பயின்ற மாணவிகளே தாங்களாக முன்வந்து ஆசிரியர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், தமிழில் அபிராமி நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தை மேற்கோள்காட்டி, சினிமாவில் மட்டும் ’நோ மீன்ஸ் நோ’ என்று கூறிவிட்டு, நிஜத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர் பேசுவதாக மீம்களைப் பகிர்ந்து அவரை பங்கம் செய்துவருகின்றனர்.


























