தீர்த்தவாரியின் போது குளத்தில் இறங்கிய அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நங்கநல்லூர் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறற இந்நிகழ்ச்சியில் சுமார் 25 அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பல்லக்கில் இருந்த உற்சவ மூர்த்திகளை குளத்தின் தண்ணீரில் மூழ்கடிப்பதற்காக கோயிலுக்கு அருகேயுள்ள மூவரசன்பட்டு குளத்தில் இறங்கி அர்ச்சகர்கள் மூழ்கியுள்ளனர். 2 முறை நீரில் மூழ்கி எழுந்த நிலையில், மூன்றாவது முறை மூழ்கும் சமயம் அர்ச்சகர் ஒருவர் நீரில் சேறும், ஆழமும் அதிகமிருந்த பகுதியில் சிக்கிக்கொண்டு நீந்தமுடியாமல் தத்தளித்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற அவருக்குப் பின்னாக 4 அர்ச்சகர்கள் சென்ற நிலையில், 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கிருந்த பிற அர்ச்சகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் அவர்களின் உடலை குளத்திலிருந்து மீட்டனர்.
இந்த நிகழ்வில் உயிரிழந்த சூர்யா(24), ராகவ்(22), ராகவன்(18), யோகேஸ்வரன்(23), வணேஷ்(20) ஆகிய ஐவரின் உடல் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துவந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
20 அடி ஆழமான இந்தக் குளத்தில் சேறு அதிகமாக இருந்ததே உயிரழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த அர்ச்சகர்கள் அனைவரும் மிகவும் இளவயதுடைய நபர்கள் என்பதால் பலரையும் இச்சம்பவம் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


























