தென்னிந்திய திரைப்படங்களில் தான் நடிக்கும்போது தனது மூளையைக் கழற்றிவிடுவேன் என்று பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் விஜயகாந்தின் ‘நரசிம்மா’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, ’பரசுராம்’, ’மழை’, ’முனி’, ’அரசாங்கம்’, ’ஆதவன்’, ’10 எண்றதுக்குள்ள’, ’வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ். இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரதானமாக நடித்துவரும் இவர், தெலுங்கு, கன்னடம், ஒடியா, மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி என பல மொழிகளிலும் நடித்துவருகிறார். தமிழில் அண்மையில் இவர் நடித்து ’தி லெஜண்ட்’ திரைப்பட்ம் வெளியானது.
இந்நிலையில், தென்னிந்திய சினிமா குறித்து ராகுல் தேவ் கூறியுள்ள கருத்து தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அவரது நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில், ”1980களின் பாணியை பின்பற்றியே தென்னிந்திய படங்கள் தற்சமயம் எடுக்கப்படுகின்றன. ஹீரோயிசம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வைத்து ரசிகர்களை அவர்கள் கவர்ந்துவிடுகிறார்கள். அதுபோன்ற படங்களில் நான் நடிக்கும்போது எனது மூளையை கழற்றிவைத்துவிடுவேன்.
ஜிம்முக்குச் சென்று வலுவாக உடலை வைத்திருக்கும் என்னை வலுவிழந்த ஹீரோ அடிப்பார். அதை நான் சகித்தாக வேண்டும். இரண்டு நபர்கள் நிஜத்தில் சண்டையிட்டால் அவர்கள் தங்கள் ஜிம் பாடியை காட்டமாட்டார்கள். ஆனால், சினிமாக்களில் தங்களது சட்டையைக் கிழித்து தங்களது உடலைக் காட்டவேண்டியுள்ளது. இவ்வாறு நிஜ வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பில்லாத, அதிக லாஜிக் மீறலைக் கொண்ட காட்சிகளுடன் தென்னிந்திய சினிமாக்கள் உருவாகின்றன” என்று பேசியுள்ளார்.
இவரது பேச்சு வலைதளங்களில் பலரது எதிர்க்கருத்துகளைப் பெற்றுவருகிறது. இவர் பிரதானமாக நடிக்கும் இந்தி அல்லது பிற வடமொழிப் படங்களில் இவ்வாறு காட்சிகள் இருப்பதில்லையா என்று தங்களது கருத்துகள் மூலம் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.


























