உலகின் மேற்பரப்பில் அதிக பரப்பை நிலத்தை விட கடல்களே ஆட்கொண்டுள்ளன. அதே போல் நிலத்தில் வாழும் உயிரினங்களை விடவும் நீரில் எண்ணிக்கையிலா அளவிலான உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் பெரும்பாலான உயிரினங்கள் மனிதர்கள் செல்லமுடியாத அளவுக்கு ஆழத்தில் இருப்பதால் இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. அவ்வப்போது நம்மை வியப்பிலாழ்த்தும் படியான வித்தியாசமான தோற்றங்களையும் இயல்புகளையும் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதுபற்றிய செய்திகள் வெளிக்கொண்டுவரப்படுவதுண்டு.
அந்த வகையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மீன்களிலேயே அதிக ஆழத்தில் வாழும் மீனை ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த மீன் சுமார் 8,000 மீட்டர்(26,247 அடி) ஆழத்தில் கடலில் வாழ்கிறது.
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தரவுகள்படி, Juvenile Pseudoliparis என்ற அடையாளம் காணப்படாத இந்த நத்தை வகை மீன் ஜப்பானில் உள்ள Izu-Ogasawara என்ற அகழியில் சுமார் 8,336 மீட்டர் (27,349 அடி) ஆழத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நத்தை மீன் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஜப்பானின் அதே அகழியில் 8,022 மீட்டர் ஆழத்தில் இருந்து மற்ற இரண்டு Pseudoliparis belyaevi நத்தை வகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மீன் அதிகபட்ச ஆழமான 8,000 மீட்டர் (26,247 அடி) ஆழத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்த நத்தை மீன்கள் குறித்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) மற்றும் டோக்கியோ கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (TUMSAT) ஆகியவற்றின் கடல் உயிரியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த ஆவண வீடியோ உலக கின்னஸ் சாதனை அமைப்பின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


























