உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 6 நபர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வயதுவந்தவர்களில் உலக அளவில் 17.5% பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
மலட்டுத்தன்மை விகிதாச்சாரம் அதிக மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நபர்கள் வாழும் நாடுகளுக்கிடையேயான ஒப்பீட்டில் குறிப்பிட்ட அளவு மாற்றத்தைக் கொண்டுள்ளது. அதன்படி அதிக வருமானம் கொண்டோர் வாழும் நாடுகளில் 17.8%-ஆகவும், குறைந்த வருமானம் கொண்டோர் வாழும் நாடுகளில் 16.5%-ஆகவும் இந்த விகிதம் உள்ளது.
இந்த அறிக்கை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் Dr.டெட்ரோஸ் ஆதானோம் கூறுகிறார். இதுபற்றி அவர், “இந்த அறிக்கை இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருவுறுதல் குறித்த புரிதலை அதிகப்படுத்தி அதன் மீதான அக்கறையை விரிவுபடுத்தியுள்ளது; மேலும் இந்த பிரச்சினை பற்றிய ஆய்வுகள் இனி சுகாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் ஓரங்கட்டப்படாது என்பதை உறுதிசெய்கிறது. இதனால் பெற்றோர் ஆவதற்கான பாதுகாப்பான, பயனுள்ள வழிகளை மக்கள் தேடுவர்” என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கருவுறாமை என்பது ஆண் அல்லது பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு நோயாகும். கணவன் – மனைவிக்கிடையேயான 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்தின் உடலுறவுக்குப் பிறகு, பெண் கர்ப்பம் அடையத் தவறுவதன் மூலம் கருவுறாமை கண்டறியப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க அளவு கவலை மற்றும் நிதி ரீதியிலான சிரமங்களை இதனால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுத்துகிறது. மேலும் இது மக்களின் மன மற்றும் உளவியல் நலனை பாதிக்கிறது.
”மில்லியன் கணக்கான மக்கள் கருவுறாமைக்கு சிகிச்சை பெற்றபின் அதிர்ச்சியடையும் படியான சுகாதார செலவுகளை எதிர்கொள்கின்றனர். இது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது” என்று சுகாதார அமைப்பின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பாஸ்கேல் அலோடி கூறுகிறார்.
1990 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின்படி அதிக வருமானம் பெறும் நபர்களைக் கொண்ட நாடுகளை விட குறைந்த வருமானம் பெரும் நபர்களைக் கொண்ட நாடுகள் கருவுறாமைப் பிரச்சினையை எதிர்கொள்ள அதிக பணம் செலவிடுகிறார்களாம். அதனாலேயே இந்த விகிதம் வருமான வேறுபாடு கொண்ட நாடுகளிடையே கணிசமான அளவு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


























