ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசன் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் மேட்சைக் காண மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் நாளை தொடங்குகிறது. சுமார் 2 மாத காலங்கள் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்தோடு ஐபிஎல் திருவிழா நடைபெறும். இந்தியாவின் முக்கிய நகரங்களின் தலைமையிலான அணிகளாகக் கொண்டு 8 அணிகள் இதில் பங்குபெற்றுவந்த நிலையில், கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் இணைந்து 10 அணிகளாக இந்த எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பிடும்படியாக, சென்ற ஆண்டு தங்களது முதல் ஆட்டத்தைத் துவக்கிய ஹர்திக் பாண்டியா கேப்டன்சியிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று ஆச்சர்யப்படுத்தியது.
இந்நிலையில் இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. நாளைய தினமான இத்தொடரின் முதல் ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மாலை 7.30 மணிக்கு அகமதாபாத்திலுள்ள நரேந்திரமோடி அரங்கத்தில் களம்காண்கின்றன.
வழக்கம் போல இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமையேற்றுள்ளார். முறையே, மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டுப்ளெசிஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எய்டன் மார்க்ரெம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிதிஷ் ராணா ஆகியோர் கேப்டன்களாக தலைமையேற்கின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாகவும், ரிஷப் பண்ட் விபத்தின் காரணமாகவும் இந்த சீசனில் கலந்துகொள்ளாதது அவர்களுக்கு சற்றே வருத்தம் தான். ஆயினும் இதில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் இடையில் ஒருவேளை இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாயினும், வழக்கம் போல் அதே எனர்ஜியுடன் அந்தந்த அணியின் கேப்டன்களும் வீர்ரகளும் தங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.


























