ஆஸ்திரேலியாவில் தங்கத் துகள்களை டிடெக்டர் வைத்து தேடி அலைந்த நபருக்கு எதிர்பாராத விதமாக தங்கப் பாறையே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்ற பழமொழி நம்மிடையே புழக்கத்தில் உண்டு. ஏதோ தேடப் போய் நாமே வியக்கும் அளவுக்கு அதற்கும் மேலாக சில விஷயங்கள் நமக்குக் கிடைத்து நம்மை திக்குமுக்காடவைக்கும் சம்பவங்கள் உலகெங்கும் நடந்தேறியவண்னம் தான் உள்ளன. அப்படி ஒரு நிகழ்வு தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள தங்க வயல்களில் உலாகங்களைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டரை வைத்துக்கொண்டு ஏதேனும் தங்கத் துகள்கள் கிடைக்குமா என்று தேடி அலைந்துள்ளார்.
அப்படி அவர் அங்கிருந்த தங்கச் சுரங்கங்களில் தங்கத் துகள்களை தேடி அலைந்த சமயம், தங்க முக்கோணம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக சுமார் 4.6 கிலோ எடை கொண்ட தங்கப் பாறை அவருக்கு கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் அதன் விலை சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ’Lucky Strike Nugget’ என்று அந்தப் பாறைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. துகள்களைத் தேடிப்போய் பாறையே கிடைத்ததில் அந்நபர் ஏக குஷியில் உள்ளார். இவர் இந்தப் பாறையை தேடப் பயன்படுத்திய மெட்டல் டிடெக்டரின் விலை 1,200 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


























