ஆவினின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழுக்கு மாற்றாக இந்தியில் தயிரை தஹி எனக் குறிப்பிடவேண்டி இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் அறிவிப்பு வெளியான நிலையில், அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் பால் பொருட்களில் ஒன்றான ஆவின் தயிரில் தமிழில் தயிர் என்றும், ஆங்கிலத்தில் Curd என்றும் இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனையாகிவருகிறது. ஆனால், இனி தயிர் பாக்கெட்டுகளில் ’தஹி’ என்ற இந்திச் சொல் கட்டாயம் இருக்கவேண்டும் என்றும் தயிர் என்ற தமிழ்ச்சொல் அடைப்புக்குறிக்குள் இருக்கலாம் என்றும் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் தயிருக்கான கன்னட சொல் ’மொசரு’ மற்றும் தெலுங்கு சொல் ’பெருகு’ போன்றவற்றுக்கு மாற்றாகவும் ’தஹி’ என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. மத்திய அரசு இந்தித்திணிப்பை தயிர் வடிவில் திணிக்கப்பார்ப்பதாக கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ”எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் ஆவின் தயிர் ’தஹி’ என இந்தியில் அச்சிடப்பட்டு வெளிவராது என்றும், மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது அறிவிப்பை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது. இதுகுறித்து இன்று வெளியான அதன் அறிவிப்பில், தயிருக்கான தஹி என்ற இந்தி சொல் கட்டாயமில்லை என்றும் அந்தந்த மாநில மொழிகளிலேயே தயிரின் பெயர் அச்சிடப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























