திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. ஜதாப் லால் நாத் தனது செல்போனில் ஆபாசப் படம் பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த ஜதாப் லால் நாத், 2018ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2018ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக ஜதாப் லால் நாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற 2023 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு திரிபுராவின் வடக்கு மாவட்டத்தின் பாக்பாசா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஜதாப் லால் நாத் ஆபாசப் படங்களை தனது செல்போனில் பார்க்கும் வீடியோ நேற்று நள்ளிரவில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திரிபுராவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாவது நாளான திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவிவருகிறது. நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இதனைப் பகிர்ந்து, ஜதாப் லால் நாத்தின் செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
சட்டசபை கூட்டத்தொடரின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுபோன்ற செயல்களைச் செய்வது மிகவும் ‘வெட்கக்கேடானது’ என்று பலரும் இந்த வீடியோவின் கீழ் கருத்திட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பல முறை முயற்சித்தும் திரிபுரா சட்டப்பேரவை சபாநாயகர் பிஸ்வா பந்து சென் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நெட்டிசன்கள் இந்த வீடியோவை வேகமாக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.


























