நரிக்குறவர் மக்கள் ரோகிணி திரையரங்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், மறுப்புக்கான காரணத்தை ரோகிணி திரையரங்க நிர்வாகம் வீடியோ வெளியிட்டு விளக்கியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் சமூக மக்கள் சிலர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே தடுத்து நிறுத்தப்பட்ட செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. உரிய அனுமதி சீட்டு வைத்திருந்தும் நரிக்குறவர் மக்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு எதனால் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தையும், நரிக்குறவர் மக்கள் பின் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கும் வீடியோ ஆகியவற்றை ரோகிணி திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுபற்றிய தனது விளக்கத்தில், ’பத்து தல’ திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு இன்று காலை எங்கள் வளாகத்தில் நடந்த சூழ்நிலையை நாங்கள் கவனித்தோம். ‘பத்து தல’ படத்தைப் பார்க்க, செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் சில நபர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குள் நுழைய முயன்றனர். படத்திற்கு அதிகாரிகள் யு/ஏ தணிக்கை செய்தது நமக்கு தெரியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி யு/ஏ சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. இதன் அடிப்படையில் 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
இருப்பினும் கூடி இருந்த பார்வையாளர்கள் கோபமாக மாறி, நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வேறு கோணத்தில் பார்த்ததால், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க அதே குடும்பத்தினர் சரியான நேரத்தில் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்துடன் படம் பார்க்கும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவையும் இணைத்துள்ளனர்.
அதே சமயம், நெட்டிசன் ஒருவர், ”உங்கள் விளக்கம் உங்கள் செயலை விட அருவருப்பு நிறைந்ததாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையுடன் உங்கள் திரையரங்குக்கு வருகிறார், அந்த குடும்பத்தை நடத்தியதை போல தான் நீங்களும் உங்கள் ஊழியர்களும் நடத்துவீர்களா? அவுங்க காசு கொடுத்த போது rules தெரியலையா” என்று இதனைப் பகிர்ந்த ரோகிணி திரையரங்க மேலாளர் நிகிலேஷின் பதிவை மேற்கோள்காட்டி கேள்வியெழுப்பியுள்ளார்.


























