ரோகிணி திரையரங்கில் உரிய சீட்டு இருந்தும் நரிக்குறவர் மக்கள் சிலருக்கு திரையரங்கிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பத்து தல’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கி திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ’பத்து தல’ படம் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்கள் சிலரை அதற்கான உரிய சீட்டு இருந்தும் திரையரங்க ஊழியர் உள்ளே அனுமதிக்காத நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி சீட்டுடன் வந்த நரிக்குறவர் மக்கள் சிலரை அந்த ஊழியர் அவமதிக்கும் விதமாக, அவர்கள் சீட்டைக் காண்பித்தும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று வாசலிலேயே நிற்கவைத்து வெளியே போகச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. சென்னை போன்ற வளர்ந்த நகரங்களிலும் இவ்வாறு தீண்டாமை கடைபிடிக்கப்படுவது அவமானத்தின் உச்சம் என்று ரோகிணி திரையரங்க வளைதள கணக்குகளை மேற்கோள் காட்டி நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் வலைதளங்களில் கருத்திட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ”அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று குறிப்பிட்டுள்ளார். ’பத்து தல’ பட்த்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் வந்த நரிக்குறவர் மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


























