மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2023-24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மதுரை மற்றும் கோயமுத்தூர் பகுதிகளில் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் போக்குவரத்து வசதி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட மெட்ரோ இரயில் திட்டஅறிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தனது அறிக்கையில்,
”சென்னை மெட்ரோ இரயில் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மேட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடேக்ட் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (28.03.2023) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கூட்டம் இன்று (29.03.2023) சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ இயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு.அர்ச்சுனை (திட்டங்கள்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தின் போது திட்ட இயக்குனர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தினார்.
விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலான்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில் நடைபெறவுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


























