தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், ஆங்காங்கே மழைபெய்து சற்றே வெப்பத்தைக் குறைத்துவருகிறது. கோடை வெயில் பிப்ரவரி மாதம் தொடங்கி தகிக்கத் துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் உக்கிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால்,
29.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயமுத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
30.03.2023: தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.03.2023 – 02.04.2023: தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33.34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26.27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி அழகரை எஸ்டேட் பகுதியில் 14 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக மதுரை விரகனூர் அணை, ராசிபுரம், மன்னார்குடி, ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பு ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























