ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தும், அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் ஒருமாதம் தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் மேற்கொள்ளவிருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. மேலும் அவர் எம்.பி. பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதைக் கண்டித்து ராகுல் காந்திக்கு ஆதவராக அகில இந்திய காங்கிரஸ் ஒரு மாதம் தொடர் போராட்டங்களில் ஈடுபடவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
”கடந்த 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜெய் பாரத் சத்தியாகிரகம் என்ற பெயரில் ஒருமாத கால தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 29ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு முகுல் வாஸ்னிக் அவர்கள் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. அவர் தலைநகர் தில்லியில் இருக்க வேண்டிய காரணத்தால் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவர் வர இயலவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படும். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்ற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும். மேலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு மோடி அதானி கூட்டுக் கொள்ளை குறித்தும், ஜனநாயக விரோதமாக தலைவர் ராகுல்காந்தி பதவி பறிப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
மேலும் பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சரபில் “பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலை” என்ற தலைப்பில் பிரச்சார கையேடு வருகிற மார்ச் 31ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும்.
ஜெய்பாரத் சத்தியாகிரக போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை கோரும் வகையில் தலைவர் ராகுல்காந்தி விடுக்கும் செய்தியை சமூக ஊட மற்றும் அச்சு ஊடகங்களின் வழியே பரப்புவதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.”


























