கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக அரசின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து இங்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவின் சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ”கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 224 தொகுதிகளிலும் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் பேர் மற்றும் மூன்றால் பாலின வாக்காளர்கள் 42,756 பேர். கர்நாடகாவில் மொத்தம் 36 தனித்தொகுதிகளும், 173 பொதுத் தொகுதிகளும் உள்ளன. மேலும் தேர்தலுக்காக மொத்தம் 58,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 13ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு பரிசீலனை மற்றும் ஏப்ரல் 24ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப்பெறும் கடைசி நாள்” இவ்வாறு தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நடைபெறுகிறது. பள்ளிகளுக்குள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை போன்ற ஆளும் பாஜக அரசின் சில நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவான திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் பாஜகவுடன் போட்டிபோட்டு வருகிறது. இதனிடையே பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அங்கு மேலோங்கியுள்ளது. கருத்துக் கணிப்பின்படி படி காங்கிரஸ் அங்கு ஆட்சியமைக்கும் என்று கூறப்படும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.


























