அதிமுக பொதுக்குழுக்கூட்டம், பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழுக்கூட்டம் கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டது, ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்தத் தீர்ப்பு இபிஎஸ் அணிக்கு ஆதரவாக அமையவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்றும், தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலோசித்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் சம்மதம் இல்லாமல் நடைபெறுவதாகக் கூறி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடைவிதிக்கவேண்டி ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், விசாரணை நடைபெற்றுவந்த இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி குமரேஷ் பாபு இன்று அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 17ல் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும், ஒபிஎஸ் தரப்பிலிருந்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அவர் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தேர்தல் ஆணையர்களாக செயல்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
தீர்ப்பின் எதிரொலியாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் ஒபிஎஸ் அணிக்கான அடுத்த பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தோல்வியைக் கண்டுவரும் ஒபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து இருக்குமா? அல்லது தனித்து இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


























