இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் இயக்கியுள்ள ’RC15’ படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ’RC15’. Sri Venkateswara Creations நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை தில் ராஜு, ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் கதைக்கரு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எழுத்து சு.வெங்கடேசன், ஃபர்ஹாத் சாம்ஜி, விவேக்.
தமிழில் ’எந்திரன் 2’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து ’இந்தியன் 2’ படத்தை இயக்கும் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டிருந்தார். அப்போது கொரோனா நோய்த்தொற்று தீவிரம், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து போன்ற காரணங்களுக்காக படப்பிடிப்பு தடைபட்டது. இதற்கிடையில் தான் தெலுங்கில் தான் இயக்கும் முதல் படத்திற்கான வேலைகளை பூஜையுடன் ஷங்கர் துவங்கினார். தொடர்ந்து ’RC15’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில், ’RC15’ படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பார்வை போஸ்டரை இதன் கதாநாயகன் ராம்சரணின் பிறந்த நாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ”Game changer” என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



























