தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வழங்கப்படவுள்ள நிலையில், யாருக்கெல்லாம் அது வழங்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்தார்.
திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தாமதமாகிவந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் அது குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி இவ்வருட செப்டம்பர் மாதத்திலிருந்து தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. தனது வாக்குறுதியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை என்று கூறிவிட்டு தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று திமுக கூறுவது ஏற்புடையதல்ல என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதுபற்றி பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவர் தனது கேள்வியில், ’மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா?’ என்று கேட்கவே அதற்கு பதிலளித்த முதல்வர், ”பலரும் உரிமைத்தொகை குறித்து நிறைய கேள்விகள் கேட்கின்றனர். அது பற்றி விளக்கமளிப்பது என் கடமை. ஊடகம் ஒன்றில், “இந்தத் திட்டத்தின் உதவியைச் செல்வந்தர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாமா?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘இல்லாத ஏழை மக்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று ஒரு பெண்மணி பதில் சொல்கிறார்.
இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. ‘பகிர்தல் அறம்’ என்றும்; ‘பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத்திட்டங்களின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும்.
இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், அதிகாலை கடற்கரை நோக்கிப் பயணிக்கும் மீனவ மகளிர், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள், சிறிய கடைகள், சிறு குறு நிறுவனத்தில் சொற்ப ஊதியத்துக்குப் பணி செய்யும் மகளிர், ஒன்றுக்கும் அதிகமான வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். விரைவில் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும்.
மாதம் ஒரு கோடிப் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். மாதம் ரூ.1,000 எப்படியாவது தங்கள் வாழ்வை மேம்படுத்தும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.” இவ்வாறு தெரிவித்தார்.


























