2023-24ம் ஆண்டுக்கான சென்னை பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
2023-24ம் ஆண்டுக்கான சென்னை பட்ஜெட், சென்னை மேயர் பிரியா ராஜனால் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்ற ஆண்டைத் தொடர்ந்து மேயர் பிரியா ராஜனால் அறிவிக்கப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. இதில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
- சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மேயர் திட்டம். இதன் மூலம் சென்னையில் உள்ள மக்கள் நேரடியாகப் புகார்களை மேயரிடமே தெரிவிக்கலாம்.
- தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய வடிவமைப்பில் சீருடை.
- உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 70 Public Address System அமைக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றும் அவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்கலிலும் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- சென்னையில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.25,000 வீதம் ரூ.5,00,00 நிதி ஒதுக்கீட்டில் இசைக்கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.
- மாலையில் சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் வகுப்பில் பங்கேற்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் வரை மாலையில் சிறுதீனி(Snacks) வழங்கப்படும். இதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில் கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ.20 லட்சம் ஒதுக்கீடு.
- பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100/100 வாங்கும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு.
- சென்னையில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க 6 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய ரூ.60 லட்சம் ஒதுக்கீடு.
- சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய ரூ.1.35 கோடி ஒதுக்கீடு.
- ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 2 டயாலிசிஸ் மையங்கள் அமைக்க தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- சென்னையில் நெகிழி தடை தீவிரமாகக் கண்காணிக்கப்படும்; மக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.


























