ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு உடையில் வந்ததையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கருப்பு உடை அணிந்து வந்தது அங்கிருந்தோரை சிரிப்பில் ஆழ்த்தியது.
மோடி சமுதாயம் குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை குஜராத், சூரத் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த நாளே அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இது காங்கிரசாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கி கருத்துரிமையைப் பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்துவந்தனர். மேலும் ’Stand with Rahul’ என்ற பதாகைகளையும் ஏந்திவந்திருந்தனர்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். அவரைச் சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள், ’ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கருப்பு உடையா?’ என்று கேள்வியெழுப்பவே, ”அய்யோ. அப்படியெல்லாம் இல்லை. எனக்கு இதுபற்றி தெரியாது. எதேச்சையாக கருப்பு உடையில் வந்துவிட்டேன்” என்று தர்மசங்கட நிலையில் நடப்பதறியாது பதிலளித்தார். இந்நிகழ்வு அங்கிருந்த செய்தியாளர்களையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது. பின் அவர் சட்டப்பேரவைக்குள் சிரித்துக்கொண்டே நுழைந்தார்.
ராகுலின் தகுதி நீக்கத்தைக் கண்டித்து இன்று இரவு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதைக் கண்டித்து திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து இன்று நாடாளுமன்றத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.


























