ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு நபர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதலுக்கு முன்பாகவே மாநில அரசுக்கு இது தொடர்பாக தடைச்சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று ஆளுநர் அதை திருப்பியனுப்பிவிட்டார்.
இந்நிலையில், தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து இம்மசோதா மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இம்மசோதா குறித்த நிறைவேற்றத்தின்போது இதுவரை ஆன்லைன் ரம்மியால் 41 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதாகவும், இனி இதுபோல் எந்த உயிரும் இந்த சூதாட்டத்தினால் போகக்கூடாது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கத்துடன் சட்டப்பேரவையில் பேசிய நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் அடுத்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்ற மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பணத்தை இழந்த விரக்தியில் அதிக அளவு தூக்கமாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக தொடர்ந்து நிகழ்ந்துவரும் தற்கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இத்தடை மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.


























