இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குநர் அமீருடன் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். திரிஷா கதாநாயகியாக அறிமுகமான இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருந்தார். வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படமாக வெளியான இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஜீவா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் இவர் இயக்கிய ’ராம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் இயக்கிய மூன்றாவது திரைப்படமான ’பருத்திவீரன்’, தமிழ் சினிமாவின் மொத்தப் பார்வையையும் அமீர் மீது திருப்பியது. மதுரையைக் கதைக்களமாக்க் கொண்டு உருவான இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து விருதுகளையும் வசூலையும் வாரிக்குவித்தது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் 2013ல் ஆதிபகவன் படத்தை அமீர் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின் இவர் நடிப்பில் கவனம் செலுத்திவந்த நிலையில், படம் இயக்காமல் இருந்துவந்தார். தற்சமயம் இவர் ’இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இவரது படங்கள் அனைத்திலும் மிக முக்கிய அம்சமாக பாடல்கள் இருக்கும். இவரது முதல் படம் தொடங்கி தற்சமயம் இவர் இயக்கிவரும் ’இறைவன் மிகப்பெரியவன்’ படம் வரை யுவன் ஷங்கர் ராஜா தான் இவரது படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவர்களது கூட்டணியின் அனைத்து ஆல்பங்களும் ஹிட் என்பதால் ’அமீர் – யுவன்’ கூட்டணிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறிவிடும்.
அந்த வகையில், ’இறைவன் மிகப்பெரியவன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணி இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் YSR Films தயாரிப்பு நிறுவனமும், அமீரின் Ameer Film Corporation தயாரிப்பு நிறுவனமும் புதிய படம் ஒன்றில் இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது.
இப்படத்தை யுவன் தயாரிக்கும் பட்சத்தில் அதற்கு அவரே இசையமைக்கும் வாய்ப்புகள் இருப்பதால் இச்செய்தி ’அமீர் – யுவன்’ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. ஆயினும் இசை, இயக்கம் குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.


























