TNPSC – Group 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு விளக்கமளித்தார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் Group 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு தொடர்ந்து தாமதமாகிவந்தது. இந்த நிலையில், கடந்த 24ம் தேதி இதன் முடிவுகள் வெளியாகின. இதில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில், ”டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் தென்காசியிலும் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இந்த முறைகேடு தேர்வர்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், TNPSC-Group 4 தேர்வு முறைகேடு குறித்தான தகவல்கள் நாளிதழ்கள் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் என் கவனத்திற்கு வந்தவுடன் நான் இதை மனிதவள மேம்பாட்டுத்துறை செயலருக்கு அனுப்பி, உடனடியாக TNPSC அதிகாரிகளிடம் பதில்பெருமாறு வலியுறுத்தினேன். TNPSC-Group 4 தேர்வைப் பொறுத்தவரை பொதுவெளியிலிருந்து வந்த தகவலுக்கும் TNPSC தரப்பிலிருந்து வந்த தகவலுக்கும் சம்பந்தமில்லை. தென்காசி மாவட்டத்தில் இத்தேர்வை எழுத மொத்தம் 8 மையங்கள் தான் இருந்துள்ளன. இதில் தேர்வெழுதியவர்களில் முதல் 500 பேரில் 27 பேர், முதல் 1000 பேரில் 45 பேர், முதல் 10,000 பேரில் 397 பேர். இதுதான் தென்காசி மாவட்டத்தில் இருக்கக்கூடிய தேர்வு மையங்களில் வந்த தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை. தனது மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக விளம்பரம் செய்யும் அந்த நபர், பல மாவட்டங்களில், பல பெயர்களில், பல நிறுவனங்களை நடத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அதே போல காரைக்குடியில், 29,575 பேர் தேர்வெழுதினர். அதில் காரைக்குடியின் ஒரு மையத்தில் தேர்வெழுதியவர்களில் மட்டும் முதல் 500 இடங்களில் 200 பேரும், முதல் 1000 இடங்களில் 377 பேரும், முதல் 2000 இடங்களில் 615 பேரும் தேர்வாகியுள்ளனர். ஆனால், இதில் சிந்திக்கவேண்டியது, 1000 பேருக்கான வாய்ப்புகளுக்கு 3000 பேர் வரை கலந்துரையாடலுக்கு அனுப்பப்படுவர். அதனால் அந்த 3000ல் ஒருவேளை 700 இருக்கலாம். ஆனால் 1000ல் 700 இல்லை” இவ்வாறு கூறினார்.


























