அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதை ஒன்றிணைத்து நிச்சயம் தலைமை தாங்குவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட்து.
அப்போது அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் பேசினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை வரவேற்பதாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், அதிமுக சார்பில் தனது ஆதரவாளர் பேசிவிட்டதாகவும், ஒபிஎஸ்-ஐ பேச அனுமதித்தது நியாயமில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இபிஎஸ் – ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திலேயே கூச்சலிட்டு மோதிக்கொண்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வி.கே.சசிகலாவிடம் கேட்கப்பட்ட நிலையில், “சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரும்பொழுது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உண்டு. மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர்(ஒபிஎஸ்) பேசியதில் எந்தத் தவறுமில்லை” என்று கூறினார்.
மேலும் இபிஎஸ் அணி – ஒபிஎஸ் அணி என்று இருபிரிவாக உள்ள அதிமுகவைத் தலைமை தாங்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”நிச்சயமாக பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்றாக இணைத்து தலைமை தாங்குவேன். அதற்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. அதிமுக என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ஆல் விதை போடப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம். அவர்கள் வழிவந்த நாங்கள் நிச்சயமாக கட்சியை சிதறவிடமாட்டோம். கட்சியை ஒன்றுசேர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியைப் பெறச்செய்வேன்” என்று கூறினார்.


























