தமிழ்நாட்டில் அமையவிருக்கும் முதல் மிதவை உணவகத்தின் கட்டுமானப் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கிவைத்தார்.
தமிழ்நாட்டின் முதல் மிதவை உணவகக் கப்பல், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்கு பிரம்மாண்ட உணவகமாக இம்மிதவை உணவகம் அமைக்கப்படவுள்ளது.
முட்டுக்காடு பகுதி தற்சமயம் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்துக்கு தலமாக செயல்பட்டுவரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய இந்த மிதவை உணவகம் இங்கு அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியின் கிராண்ட்யூனர் மரைன் இண்டர்னேஷனல் நிறுவனம் ஆகியவை மூலமாக தனியார் மற்றும் பொதுப்பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
குளிரூட்டப்பட்ட 2 தளங்களுடனும், தரைத்தளத்தில் சமயலறை மற்றும் கழிவறை ஆகிய நவீன வசதிகளைக் கொண்டும் அமைக்கப்படவிருக்கும் இதன் கட்டுமானப் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கிவைத்தார்.


























