ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்களாக இருப்பர் என்று ராகுல் காந்தி சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதை எதிர்த்து பாஜக எம்.பி. புருனேஷ் மோடி குஜராட், சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதாகவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மேல்முறையீட்டிற்கு ஏதுவாக அவருக்கு 50 நாட்கள் பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக அல்லாத அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ராகுல் காந்தி வகித்துவரும் எம்.பி. பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசியலமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன் பிரிவு 8ன் படி, வயநாடு தொகுதிக்கான எம்.பி. பதவியிலிருந்து மார்ச் 23 முதல் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



























