பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான பல பாடல்களைப் பாடி மக்களிடையே பரிச்சயமானவர் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ. இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் இசையை முறைப்படி பயின்று பல்வேறு இசைக்கச்சேரிகளையும் நடத்திவருகிறார்.
தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய வசீகரா, உனக்குள் நானே, யாரோ மனதிலே, முதல் கனவே உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மனதில் நீங்காதவை. இசைக்காக பிலிம்ஃபேர், தமிழ்நாடு மாநில விருது, சங்கீத கலாசாரதி, கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் இசைக்கச்சேரியில் கலந்துகொள்ள சென்றிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்செய்தி இசை ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


























