ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்வலைகளைக் கிளப்பிய நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலதரப்பினரால் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டி அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டமசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இம்மசோதா ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதை மீண்டும் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி இம்மாதம் 6ம் தேதி திருப்பியனுப்பினார். மேலும் அதில் ’ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதை மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பும் பொருட்டு அதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
”தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். கனத்த இதயத்துடன் சட்டப்பேரவையில் நிற்கிறேன். இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இங்கு தெரிவிக்கிறேன். கொள்கை ரீதியா நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், மனித உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயம் உள்ள யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. எனது மரணம் கடைசியாக இருக்கட்டும் என்ற சோகக் குரலும், என் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்திற்கு ஏற்படக்கூடாது என்ற அழுகுரலும் இனி ஒருமுறை, எந்தவொரு மாநிலத்திலும் எழக்கூடாது. அப்படி எழுமானால் சட்டத்தின் குரலும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப்போனதாக ஆகிவிடும்.
மனசாட்சியை உறங்கசெய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்தமுடியாது. எந்த சட்டத்தின் நோக்கமும், மக்கள் நலன் மட்டும் தான். மக்களைக் காப்பதொன்றே சட்டத்தின் கடமை. இனியும் எந்த உயிரும் பறிக்கப்படாமல், இனி எந்தக் குடும்பமும் நடுத்தெருவில் நிற்காமல், இனி ஒரு நாளும் இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டமுன்வடிவை ஆதரிக்கவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார். இதைத்தொடர்ந்து அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


























