தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவை நகைச்சுவைப் புயல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாது ஆட்கொள்வதுண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் என ஒவ்வொரு கட்டத்திலும் தனது நகைச்சுவையால் தமிழ்சினிமாவை செழிப்பாய் வைத்திருந்த கலைஞர்கள் பலர். அப்படி 80கள் தொடங்கி கிட்ட்த்தட்ட 40 வருடங்களாக தமிழ்சினிமாவில் நடித்து நகைச்சுவை ஜாம்பவானாக விளங்குபவர் செந்தில்.
எளிய பின்னணியிலிருந்து சினிமாத்துறைக்குள் நுழைந்த செந்தில், தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் உயர்ந்துகாட்டியவர். நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் யாவும் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் நம்மை வைத்தகண் வாங்காமல் பார்க்கவைக்கும். நகைச்சுவை கதாபாத்திரங்கள் தவிர்த்து குணச்சித்திர பாத்திரங்களிலும் நம்மை கவர்ந்தவர் செந்தில்.
தந்தை திட்டியதால் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில், மதுபானக் கடையில் சர்வராகப் பணியாற்றி பின் நாடகங்களில் நுழைந்து, பின் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து படிப்படியாக முன்னேறியவர். 1979ல் ’ஒரு கோயில் இரு தீபங்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் தோன்றிய அவர், தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, இன்று போய் நாளை வா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
கவுண்டமணி கூட்டணியில் இவர் நடித்த கரகாட்டக்காரன், எஜமான், இந்தியன், சமுத்திரம், வைதேகி காத்திருந்தாள், ஜென்டில் மேன், பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற பல படங்கள் நகைச்சுவைக்காகவே பேசப்பட்ட படங்கள். பாய்ஸ் படத்தில் சில நிமிடங்களே வந்து போகும் இவரது அன்னவெறி கண்ணையன் கதாபாத்திரம் பலரால் ரசிக்கப்பட்ட ஒன்று. ’அந்த ஒரு பழம் தான் ணே இது’, ’இதுல எப்டி ணே எரியும்… போங்கண்ணே’, ’இன்பர்மேசன் இஸ் வெல்த்’, ’பாடுடி… என் ராசாத்தி’, ’நோ கமெண்ட்ஸ்… சிம்ப்ளி வேஸ்ட்’ போன்ற இவர் பேசிய வசனங்கள் காலத்தால் அழியாதவை.
தற்சமயம் சினிமாவில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்துவரும் செந்தில், இறுதியாக ’பிஸ்தா’ என்ற படத்தில் தோன்றினார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் கடந்த 2019ம் ஆண்டு நடித்தார். தனது தனித்துவ பாணியில் நம்மை சிரிக்கவைத்த செந்தில் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து பல படங்களில் நடித்து நம்மை சிரிக்கவைக்கவேண்டும் என்று பிரார்த்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.


























