பங்குச்சந்தை குறித்த புரிதல் உள்ள மீம் கிரியேட்டர்களுக்கு மாதம் 1 லட்சம் சம்பளத்துடன் வேலை தரவிருப்பதாக பெங்களூர் நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்சமயம் இணையத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் விஷயங்களில் மிக முக்கியமானது மீம்ஸ். ஒருகாலத்தில் ஒரு செய்தியை பார்வையாளர்களுக்குக் கடத்த எத்தனையோ சொற்கள் காணொலியாகப் பேசவும், செய்திகளாக எழுதவும் பயன்பட்டன; ஆனால், ஒரே ஒரு படம் மூலம் படைப்பாற்றல் கொண்ட ஒரு மீம் கிரியேட்டர் அச்செய்தியைப் பொட்டில் அறைந்தாற்போல் பார்ப்போருக்கு தற்சமயம் புரியவைத்திட முடியும்.
அது துக்கசெய்தியோ, நகைச்சுவைப் பதிவோ, நெகிழவைக்கும் உண்மையோ, தொழில்நுட்பம் சார்ந்த விஷயமோ, எதுவாயினும் ஒரு மீம் அதை பலராலும் கவனிக்கவைத்துவிடும். தனது மீமில் கிரியேட்டிவிட்டியைப் புகுத்திடும் சாதாரண ஒரு நபரால், அதை உலகின் மிகவும் புகழ்பெற்ற நபரைக் கவனிக்கவைத்துவிட முடியும். அதுதான் மீமின் வலிமை. இதைக்கருத்தில் கொண்டு தான் பல்வேறு துறைகளிலும் அதுகுறித்த புரமோஷன்களுக்கு புதுமையான மீம்கள் பயன்படுத்தத் துவங்கப்பட்டுவிட்டன.
அந்த வகையில் தான் பெங்களூரைச் சேர்ந்த பங்குச் சந்தை நிறுவனம் ஒன்று அத்துறை குறித்த புரிதல் கொண்ட மீம் கிரியேட்டருக்கு மாதம் 1 லட்சம் சம்பளத்துடன் பணிவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. StockGro என்ற அந்த நிறுவனம் பங்குச்சந்தை மற்றும் நிதி மேலாண்மை குறித்த புரிதல் கொண்ட மீம் கிரியேட்டர்களைத் தேடிவருகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அந்த நிறுவனத்தின் இணையப்பக்கத்தை பார்வையிடலாம். மேலும் பணி குறித்த மற்ற விபரங்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.


























