பிரதமர் மோடி பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ’எப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் வருகிறது’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ராகுல் காந்தி மோடி சமுதாயத்தினர் அனைவரையும் இழிவுபடுத்தும்படி பேசிவிட்டதாகவும் தனது வழக்கில் அவர் தெரிவித்திருந்தார்.
சுமார் 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இவ்வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இதற்கு தீர்ப்பளித்த நீதிபதி வர்மா, ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடெங்கிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரசார் கும்பகோணத்தில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்ப்பில் ராகுல் தரப்பு மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு 30 நாட்கள் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி “எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே என் கடவுள், அதை அடைய அகிம்சை வழி” என்ற மகாத்மா காந்தியின் பொன்மொழியை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது மற்றொரு ட்வீட்டில், ”பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு அவர்களின் தியாக தினத்தில் அவர்களுக்கு வணக்கங்கள்! உண்மை மற்றும் தைரியத்தின் விளிம்பைப் பிடித்து, நாட்டிற்காக அச்சமின்றிப் போராடுவதை, பாரத அன்னையின் இந்தத் துணிச்சலான மகன்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டோம். புரட்சி வாழ்க.” என்று குறிப்பிட்டுள்ளார்.


























