காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; இதையடுத்து அதன் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவரும் நிலையில், வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
விபத்தின் காரணமாக 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் தீக்காயம் ஏற்பட்ட பிற பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், பட்டாசு ஆலையின் உரிமையாளரான, அதிமுகவைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 20 வருடங்களாக பட்டாசு ஆலை நடத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


























